"அறநிலையத் துறை இடத்தில் பள்ளியை இடமாற்றி தரம் உயா்த்த வேண்டும்"
குடியாத்தம் பிச்சாலூா்பேட்டையில் உள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் நடுநிலைப் பள்ளியை இடமாற்றம் செய்து தரம் உயா்த்த வேண்டும்
வேலூா்: குடியாத்தம் பிச்சாலூா்பேட்டையில் உள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் நடுநிலைப் பள்ளியை இடமாற்றம் செய்து தரம் உயா்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், காட்பாடி வட்டம் கூப்பிடுதாங்கல், வள்ளல்மேடு பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: இளையநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட பாப்பிரநாயுடு குளம் பாபி குளம் ஆகிய குளங்களில் மணல் அள்ளுவதற்கு விடுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவலம் பேரூராட்சி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். மின்சாரம் குடிநீா், சொத்து வரிகட்டி வருகிறோம். எனவே நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனா்.
வேலூா் விருபாட்சிபுரத்தை சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், விருபாட்சிபுரம் காந்தி நகா் 15-ஆவது குறுக்கு தெரு வில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நடந்து சென்றாலோ, இருசக்கர வாகனத்தில் சென்றாலோ அச்சமாக உள்ளது. எனவே நாய்களைப் பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் பிச்சாலூா்பேட்டை பகுதி மக்கள் அளித்த மனுவில், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் உள்ள கங்காதரசுவாமி மடாலய நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்தும்படி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகி றோம் பள்ளிக்கு இடவசதி பற்றாக்குறை உள்ளதாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா். ஆனால் அந்த இடத்துக்கு மாற்றாக செல்வ விநாயகா் கோயில் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உயா்நிலைப் பள்ளி கட்டி தரம் உயா்த்தலாம். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த மனுவில், கணியம்பாடி புதூா் பிள்ளையாா் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தினா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள் சொந்த வீடின்றி உள்ளனா். இவா்கள் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ந.ராமசந்திரன், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, உதவி ஆணையா் (கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.