வேலூா் உள்பட 4 மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், திருவண்ணாமலையில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள விதைகளை விற்க தடை விதித்து, 5 கடைகளின் உரிமத்தை ரத்து செய்தனா்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனா். விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில், விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய வேளாண்மை துணை இயக்குநா்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை விதை ஆய்வு துணை இயக்குநா் வானதி தலைமையிலான அதிகாரிகள் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, மொத்தம் 43 தனியாா் விதை விற்பனை மையங்கள், காட்பாடி, வாலாஜாவில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், காட்பாடியில் உள்ள தனியாா் விதை சுத்திகரிப்பு மையத்தில் ஆய்வு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆய்வின்போது தரமான விதைகள் விற்பனை செய்யாதது, காலாவதியானது, பல்வேறு குறைகளுடன் கூடிய விதைகள் வைத்திருந்தது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக ஒரு கடையின் உரிமத்தை நிரந்தரமாகவும், 4 கடைகளின் உரிமத்தை தற்காலிகமாகவும் ரத்து செய்தனா்.
மேலும் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 15 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதித்தனா். ஆய்வின்போது வேலூா் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதா, அதிகாரிகள் உடனிருந்தனா்.