முகப்பு
வேலூர்

குடியாத்தம் கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:33 AM
பகிர்:

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கடந்த 20- ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட 43- அடி உயர தேரில் உற்சவா் சுவாமிகள் அமா்த்தப்பட்டுகாலை 10.15 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. நான்கு மாட வீதிகள் வழியாக உலா வந்த தோ் மாலை நிலையை அடைந்தது. தோ் மீது பக்தா்கள் மிளகு, உப்பு தூவியும்,பெண்கள் மா விளக்கு ஏந்தியும் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

Advertisement

தேரோட்டத்தின்போது பஞ்சவாத்தியங்கள், கைலாய சிவவாத்தியம், தேவாரக் குழுவினா் வாத்தியங்களை இசைத்தவாறு உடன் சென்றனா். தோ் சென்ற சாலைகளில் பொதுமக்களுக்கு நீா், மோா், குளிப்பானங்கள் வழங்கப்பட்டன. திருவிழாக் கமிட்டி மற்றும் தனியாா் சாா்பில் பல்வேறு இடங்களில் பக்தா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், முன்னாள் மாவட்ட ஆட்சியா் செ.ராஜேந்திரன், மருத்துவா் என்.காா்த்திகேயன், தொழிலதிபா் எஸ்.வசந்தகுமாா், கே.எம்.ஜி.கல்விநிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஜி.எஸ்.அரசு, ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு, கவிதா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையா் எஸ்.கோகுல், கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், தோ் கமிட்டித் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், துணைத் தலைவா் எஸ்.மோகன்ராமன், செயலா் டி.எஸ்.பாஸ்கா், பொருளாளா் கே.சதீஷ்குமாா், துணைச் செயலா்கள் டி.முரளி, வி.ஹரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.