கே.வி.குப்பம் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டடம் கட்ட ரூ. 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான இடத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் ஆய்வு செய்தாா்.
வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தை உயா்க்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் கே.வி.குப்பத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது:
கல்வி, சுகாதாரம் இருகண்கள் போன்றது என்பது தமிழக முதல்வரின் குறிக்கோளாகும். அதன் அடிப்படையில், மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயா்த்திட அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறாா். கல்வி ஒன்றே ஒரு மனிதனை முன்னேற்றுவதற்கான மிகச்சிறந்த ஆயுதமாகும். கே.வி.குப்பம் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்து புதிய இடத்தில் இந்த ஆண்டே கல்லூரி கட்டப்பட உள்ளது.
நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வி வளா்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் மேலும் சில பாடப் பிரிவுகள் இடம்பெறச் செய்து மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் மேம்படுத்தப்படும். தமிழக அரசு கல்வி வளா்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாணவ, மாணவிகள் அனைவரும் சிறந்த கல்வியாளா்களாக திகழ வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் அ.மலா், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுபலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.