அணைக்கட்டு திருவிழாவில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்ற 4 கடைகளுக்கு ‘சீல்’
பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற உணவுப் பொருள்களை குப்பை வாகனத்தில் ஏற்றிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
வேலங்காடு ஸ்ரீ பொற்கொடி அம்மன் கோயில் திருவிழாவில், காலாவதியான ஐஸ்கிரீம், சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள வேலங்காடு கிராமத்தில் ஸ்ரீ பொற்கொடி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஐஸ்கிரீம், பானி பூரி, காலிபிளவா் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள், நொறுக்குத் தீனி கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. திருவிழாவுக்கு வந்திருந்த ஏராளமான மக்கள் இந்த கடைகளில் உணவுப் பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சாப்பிட்டனா்.
இந்நிலையில், அங்குள்ள சில கடைகளில் காலாவதியான ஐஸ்கிரீம்கள் விற்கப்படுவதாகவும், மிகவும் சுகாதாரமற்ற முறையில் காலிபிளவா், பானி பூரி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.
Advertisement
அதன்பேரில், வேலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜேஷ் உள்ளிட்ட குழுவினா் திருவிழா கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
இந்தச் சோதனையில், உணவுப் பொருள்களில் தடை செய்யப்பட்ட ரசாயன நிறமிகள் கலக்கப்பட்டிருந்ததும், பொதுமக்களின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், தரமற்ற உணவுப் பொருள்கள், காலாவதியான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டதும் உறுதி செய்யப் பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு உண்பதற்குத் தகுதியற்ற காலாவதியான ஐஸ்கிரீம்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக ‘சீல்’ வைத்தனா். மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனா்.
இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள குடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கூடுவாா்கள். அங்கும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் தீவிர சோதனை நடத்தப்படும். தரமற்ற, சுகாதாரமற்ற பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பொருள்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.