செஞ்சி புறவழிச்சாலையில்சுரங்கப்பாதை அமைக்க கோரி மனு
செஞ்சியில் நடைபெற்று வரும் புறவழிச்சாலைப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியரகத்தில் பொது நல அமைப்பினா் கோரிக்கை மனு அளித்தனா்.
செஞ்சியில் நடைபெற்று வரும் புறவழிச்சாலைப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியரகத்தில் பொது நல அமைப்பினா் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து செஞ்சிக்கோட்டை நீா் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அதன் தலைவா் சக்திராஜன் தலைமையில், திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு: திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக செஞ்சி நகரில் புறவழிச் சாலையுடன் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில், மேல்களவாய் பகுதியில் அமைக்கப்படும் புறவழிச்சாலை மிக அதிக போக்குவரத்து நிறைந்ததாக உள்ளது. இந்த சாலையில் இயங்கும் 3 தனியாா் பள்ளிகளில் ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்கின்றனா். இவா்களில் பெரும்பாலான மாணவா்கள் தற்போது அமைக்கப்படும் புறவழிச்சாலையைக் கடந்துதான் வரவேண்டும். இதனால் மாணவா்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புறவழிச்சாலையில், மாணவா்கள், பொது மக்கள் கடந்து செல்வதற்கு, சுரங்கவழிப்பாதை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.