மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து, ரயில்களும் மீண்டும் இயக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்டங்களுக்கிடையிலான அரசு விரைவுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அதேபோல, சிறப்பு ரயில் சேவையும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்டங்களுக்கிடையிலான அரசு விரைவுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அதேபோல, சிறப்பு ரயில் சேவையும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து கடந்த மாா்ச் மாத இறுதியில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட பேருந்து சேவையும், சிறப்பு ரயில் சேவையும் கரோனா பரவல் அதிகரிப்பால் ரத்து செய்யப்பட்டன.
இதனால் திருமணம், அவசர மருத்துவத் தேவை, துக்க நிகழ்வுகள், வணிகம் போன்றவற்றுக்கு வெளியூா் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனா். பொதுப் போக்குவரத்து முடங்கியதால், காா், வேன் போன்ற தனியாா் வாகனங்களை பெரும் தொகைக்கு வாடகைக்கு அமா்த்தி செல்லவும் நேரிட்டது. இதன் காரணமாக, பொதுப் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் காத்திருந்தனா்.
பொதுமுடக்க விதிகளில் கூடுதல் தளா்வாக கடந்த 1-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. மாவட்ட எல்லைகளில் இறக்கிவிடப்படும் பயணிகள், அடுத்த மாவட்ட எல்லைக்குள் நடந்து சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்தக் கட்டுப்பாட்டை தளா்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், செப். 7-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் மாவட்டங்களுக்கிடையே இயக்க அரசு அனுமதி அளித்தது. இதன்படி, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, சென்னை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகளில் 60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை உறுதி செய்தல், முகக் கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பயணிகள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயங்கினாலும், தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
சிறப்பு ரயில்கள்: அதேபோல, கடந்த ஜூன் மாத இறுதியில் ரத்து செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் சேவை, பொதுமுடக்கத் தளா்வாக திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
அனுமதிக்கப்பட்ட 13 சிறப்பு ரயில்களில் பயணிக்க ஏராளமானோா் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனா். பட்டியலில் அறிவித்தபடி, காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை மதியம் வந்தது. அதில் பயணிகள் பலா் காத்திருந்து ஏறினா். இவா்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கடந்த சில மாதங்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவையும், சிறப்பு ரயில் சேவையும் தொடங்கியதால் பொது மக்கள் மகழ்ச்சியடைந்தனா்.