அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு ‘ஆக்சிஜன்’ அளிக்கும் வசதி மேம்பாடு
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் கிடங்கு வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் கிடங்கு வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி கூறியதாவது: இங்குள்ள மகப்பேறு பிரிவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 324 கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனா். மகப்பேறு பிரிவு துறைத் தலைவா் ராஜேஸ்வரி, வில்வப்பிரியா, தங்கமணி ஆகிய மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் 19 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது. 71 பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்று குணமடைந்தனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோா் மூச்சுத் திணறல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில் தாமதமாகவே மருத்துவமனைக்கு வருகின்றனா். மருத்துவமனையில் கடந்த மே மாத தொடக்கத்தில் உயரளவு ஆக்சிஜன் செலுத்தும் கருவிகள் (ட்ச்ய்ா்) 3 எண்ணிக்கையில் மட்டுமே இருந்தன. தற்போது தமிழ்நாடு சேவை கழகத்திலிருந்து 27 கருவிகளும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து 2 கருவிகளும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 32 உயரளவு ஆக்சிஜன் செலுத்தும் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.
இங்கு தற்போது 10 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் கிடங்கு பயன்பாட்டில் உள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகமுள்ளதால் இதனை 24 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் கிடங்காக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து ஆக்சிஜன் கிடங்கு செயல்பாட்டுக்கு வந்தவுடன் கரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவில் ஆக்சிஜன் செலுத்தும் வசதி கிடைக்கும். கரோனா நோயாளிகளுக்கு பேராசிரியா்கள் முருகேசன், ரவிக்குமாா், தா்மலிங்கம், வெங்கடேசன் ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா் என்றாா் அவா்.