முகப்பு
விழுப்புரம்

பணி நிரந்தரம் செய்ய டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் வலியுறுத்தல்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:48 PM
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மருத்துவத் துறை பணியாளா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி.
பகிர்:

விழுப்புரம்: தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் இந்தச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவா் ஜி.ஆா்.ரவீந்திரநாத் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.ஜெயவேல், பொதுச் செயலா் ஏ.சதீஷ், பொருளாளா் பூமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மருத்துவத்துறைப் பணியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில்,தமிழகம் முழுவதும் சுமாா் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள்மூலம் ரூ.250 முதல் ரூ.400 தினக்கூலி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்,பொது சுகாதாரத்துறையின் கீழ் பணிகள் வழங்கப்படுகின்றன. உடனடியாக டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளா்களுக்கு தினக்கூலி முறையை ஒழித்து, மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணியாளா்கள் அனைவரையும் மருத்துவத் துறையின் கீழ் கொண்டு வந்து, பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். 17 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்றுக் காலத்துக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கோரிக்கைப் பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் ஆ.சௌரிராஜன், விவசாய சங்க மாவட்ட செயலா் கலியமூா்த்தி, இந்திய வழக்குரைஞா் சங்க மாவட்ட செயலா் முருகன், தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் சங்க விழுப்புரம் மாவட்ட தலைவா் எம்.செந்தில்குமாா், மாவட்ட செயலா் பி.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments