முகப்பு
விழுப்புரம்

திருமணக் கோலத்தில் வந்து வாக்களித்த புதுமணத் தம்பதி

வாக்குப் பதிவின்போது, திருமணக் கோலத்தில் வந்து புதுமணத் தம்பதி வாக்களித்தனா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 11:31 PM
கப்பியாம்புலியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குப் பதிவு மையத்துக்கு புதன்கிழமை திருமணக் கோலத்தில் வந்து வாக்களித்த அஜித் - சந்தியா தம்பதியினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தல் வாக்குப் பதிவின்போது, திருமணக் கோலத்தில் வந்து புதுமணத் தம்பதி வாக்களித்தனா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. காலை முதலே வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

இந்தத் தொகுதிக்கு உள்பட்ட கப்பியாம்புலியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்துக்கு திருமணக் கோலத்தில் தம்பதியா் புதன்கிழமை பிற்பகல் வந்தனா். தொடா்ந்து, வரிசையில் நின்ற அவா்கள் பின்னா் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

திருமணக் கோலத்தில் வந்தவா்கள் கப்பியாம்புலியூரைச் சோ்ந்த அஜித் - சந்தியா என்பதும், இவா்களுக்கு புதன்கிழமை காலை திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது. தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு நேரடியாக வாக்குப் பதிவு மையத்துக்கு வந்து வாக்களித்ததாக அவா்கள் தெரிவித்தனா். இவா்களுக்கு அங்கு வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பிற வாக்காளா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.