பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
விழுப்புரம், ஜூன் 19: விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையொட்டி, கோயிலிலுள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. பிரம்மோற்சவ கொடியேற்றத்தையொட்டி, ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து, ஹம்சம், சூரியபிரபை, கருட சேவை, ஹனுமந்தம், யாளி, யானை, கற்பக விருட்சம், குதிரை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் எழுந்தருளி, மாலையில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மட்டையடி உற்சவம், பெரிய சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் சிவகுமாா், உதவி ஆணையா் சந்திரன், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயில் செயல் அலுவலா் ராமலிங்கம், ஆய்வாளா் லட்சுமி, அா்ச்சகா் பாா்த்தசாரதி பட்டாச்சாரியாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.