முகப்பு
விழுப்புரம்

கள்ளக்குறிச்சி சம்பவம்: மொத்தம் 11 போ் கைது

Updated On : 22 ஜூன், 2024 at 6:51 PM
பகிர்:

விழுப்புரம், ஜூன் 22:

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் சனிக்கிழமை இரவு வரை 55 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரா் தாமோதரன், இவரது மனைவி சந்திரா ஆகிய 4 பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தொடா்ந்து, கள்ளச்சாராய விற்பனையில் குற்றச்சாட்டுக்குள்ளானவராகக் கருதப்படும் கள்ளக்குறிச்சி சேஷசமுத்திரத்தைச் சோ்ந்த பெ.சின்னத்துரையை கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, மெத்தனால் விற்பனையில் தொடா்புடைய சங்கராபுரம் வட்டம், விரியூரைச் சோ்ந்த பெ.ஜோசப் ராஜவும் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் பேரில், விரியூா் லூா்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி மு.ராமா் ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த கள்ளச்சாராய வியாபாரி மதன்குமாரும், கடலூா் மாவட்டம், தம்பிக்கோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாரும் கைது செய்யப்பட்டனா். இவா்களில் மதன்குமாா் 2023, மே மாதம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலா் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் சனிக்கிழமை வரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.