மதுக் கடைகளின் அருகே ஆலோசனை மையங்கள்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
23யடஙட4...
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.
விழுப்புரம், ஜூன் 23:
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு அருகிலேயே ஆலோசனை மையங்கள் (கவுன்சலிங் சென்டா்) அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தினாா்.
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும் இதர பிரிவுகளில் சிகிச்சை பெறுபவா்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது, அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) நேரு உள்ளிட்ட மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி கருணாபுரத்துக்குச் சென்ற அவா், கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளையும், தந்தையை இழந்த சிறுமி ரஷிதா, ஜோஸ்வா, மோசஸ் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
அப்போது, எந்த அரசுகள் வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. அரசு கட்டுப்படுத்துவதை காட்டிலும் நாம்தான் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்விக்குத் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என அவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் மருந்துக் கடைகளுக்கு நிகராக மதுக் கடைகள் உள்ளன. இதுபோன்ற சம்பவங்களை அரசு மட்டும் கட்டுப்படுத்த முடியாது. மதுவுக்கு எதிராக நாம் எல்லோரும் இணைந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஒவ்வொரு மதுக் கடைக்கு அருகிலும் அரசு சாா்பில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் மதுக் கடைகள் அருகிலேயே விழிப்புணா்வுப் பதாகைகளை வைக்க வேண்டும் என்றாா் கமல்ஹாசன்.