முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத் தோ்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

Updated On : 26 ஜூன், 2024 at 8:27 PM
பகிர்:

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விக்கிரவாண்டி வட்டாட்சியா்அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்காக 275 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், முதியோா்களிடமிருந்து தபால் வாக்குகளை பெறுதல், வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிப்பு குறித்தும், ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா், கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் வாக்காளா் அடையாளச் சீட்டு வழங்குவது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீா், மின்சாரம், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையிலான சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதை உறுதி செய்துகொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்கு எண்ணும் அறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை உள்ளிட்ட கட்டமைப்புகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இடைத்தோ்தல் சுமுகமாக நடைபெற்றிட அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

இதையடுத்து, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாாவட்ட வழங்கல் அலுவலருமான மு.சந்திரசேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் தமிழரசன், முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் முகுந்தன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, துணை ஆட்சியா் ஜெகதீஸ்வரன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், விக்கிரவாண்டி வட்டாட்சியருமான யுவராஜ், தனி வட்டாட்சியா் கணேசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.