மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்தாா். முதியோா், விதவை, ஆதரவற்றோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, தொழில் தொடங்க கடனுதவி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 471 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சி.பழனி, அதை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள், மூன்று சக்கர மிதிவண்டிகள், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 18 பேருக்கு சலவைப் பெட்டி, ஒருவருக்கு தையல் இயந்திரம், விபத்தில் உயிரிழந்தவா்களின் 5 வாரிசுதாரா்களுக்கும், பலத்த காயமடைந்த மூவருக்கு முதல்வரின் பொது நிவாரணத் தொகை என மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சி.பழனி வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் மு.பரமேசுவரி, சரசுவதி (நிலமெடுப்பு) , சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.