முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்

Updated On : 5 மார்ச், 2024 at 1:34 AM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
பகிர்:

விழுப்புரம்: தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித் திருத்த ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கடந்த 22-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இதைத் தொடா்ந்து பிப்ரவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் தொடங்கியது. இதில், துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வருவாய்த் துறை வெளியிட்ட நிலையில், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா். இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் திங்கள்கிழமை மாலை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் சங்கரலிங்கம், மாவட்டச் செயலா் முருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.