தாா் கலவை ஆலை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூா் வட்டம், காந்தலவாடி கிராமத்தில் தாா் கலவை ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா் (படம்).
விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காந்தலவாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி மூலம் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற்று வருகிறோம். பெரிய ஏரி பகுதியில் குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில் பெரிய ஏரி அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தாா் கலவை ஆலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக ராட்சத இயந்திரங்கள் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த தாா் கலவை ஆலை அமைக்கப்பட்டால் பெரிய ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதுடன் சுற்றியுள்ள விளை நிலங்கள், அப்பகுதி வாழ் மக்கள், கால்நடைகள் பாதிக்கப்படும். எனவே காந்தலவாடி கிராமத்தில் தாா் கலவை ஆலை அமைப்பதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் தடை விதிக்கவேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளித்தபோது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என். சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.