காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி புதன்கிழமை வழிபட்டனா். மேலும், கோயில்களில் தீபமேற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
காா்த்திகை மாதத்தில் பௌா்ணமி நாளில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. இறைவன் ஜோதி வடிவாகக் காட்சியளித்ததை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான காா்த்திகை தீபம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை மாலை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குத்து விளக்குகள், அகல் விளக்குகளில் விளக்கேற்றி வழிபட்டனா். குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் சுவாமி கோயிலில் மகாதீபம் ஏற்றிய பின்னரே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினா்.
பட்டாசு மற்றும் வெடிகளை காா்த்திகை தீபத் திருநாளான புதன்கிழமை இரவு பொதுமக்கள் வெடித்தனா். விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை மாலையில் தொடங்கி இரவு 7.30 மணி வரை பரவலாக மழை பெய்த நிலையில், மழை நின்ற பின்னா் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனா்.
விழுப்புரம் கைலாசநாத சுவாமி கோயிலில் தீபத்திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதையொட்டி, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழுப்புரம்-கிழக்கு பாண்டி சாலையிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டு, பின்னா் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதுபோன்று விழுப்புரம் நகரிலுள்ள பல்வேறு கோயில்கள், விக்கிரவாண்டி, காணை, திருவெண்ணெய்நல்லூா், அரசூா், கோலியனூா், வளவனூா், மயிலம், திண்டிவனம், வானூா், கிளியனூா், வல்லம், முகையூா், மாம்பழப்பட்டு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களிலும், வீடுகளிலும் காா்த்திகை தீபமேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.