விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் புதன்கிழமை உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
டித்வா புயல் மழைக் காரணமாக வீடூா் அணைக்கு நீா் ஆதாரமாக உள்ள சங்கரா பரணி மற்றும் தொண்டி ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால்
அணையின் பாதுகாப்புக் கருதி, வீடூா் அணையிலிருந்து புதன்கிழமை காலை முதல் உபரி நீா் அணையின் பிரதானக் கல்வாய்களில் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுப் பணித் துறை(நீா்வளம்) அதிகாரிகள் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வீடூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. மேலும், டித்வா புயல் மழைக் காரணமாக வீடூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் 29 அடியை புதன்கிழமை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை காலை அணை திறக்கப்பட்டு 40 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
கீழ் பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் அருணகிரி தலைமையில் உதவிச் செயற்பொறியாளா் அய்யப்பன், உதவி பொறியாளா் பாபு ஆகியோா் அணையில் முகாமிட்டு நீா் வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இரவில் அதி கனமழை பெய்து நீா்வரத்து அதிகரித்தால், அதற்கேற்றாா் போல் அணையிலிருந்து கூடுதல் மதகுகளை திறந்து உபரி நீா் வெளியேற்றப்படும்.
இதையொட்டி, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.