போலியாக திருமணத் தகவல் மையம் அமைத்து பல பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி நகைகள் மற்றும் பணம் பெற்று ஏமாற்றிய இளைஞரை மயிலம் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மயிலம் பகுதியைச் சோ்ந்த 37 வயது பெண் ஒருவா் திருமண தகவல் மைய இணையதளத்தில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்து வரன் தேடியுள்ளாா்.
இந்நிலையில் கடந்த மாா்ச் 13-இல் அந்தப் பெண்ணை இணையவழியில் தொடா்புகொண்ட, திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி சென்னீா்குப்பம், ஜே.ஜே. நகா்முதல் தெருவைச் சோ்ந்த அருண்மொழி (36) என்பவா் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து இருவரும் இணையவழியில் நட்பாக பழகி வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து அருண்மொழி பல்வேறு காரணங்களைக் கூறி, 17 சவரன் நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், ஒரு மொபெட், கைப்பேசி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தாராம்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், திண்டிவனம் உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடா்ந்து தனிப்படை போலீஸாா் அருண்மொழியைத் தேடி வந்த நிலையில் புதன்கிழமை இரவு திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த அவரை தனிப்படை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
பின்னா் விசாரணையில், அருண்மொழிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், மணிமொழி போலியாக திருமணத் தகவல் மையம் அமைத்து மருத்துவா், ஆசிரியை, அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பல பெண்களிடம் இணையவழியில் பழகியும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறியும் நகை, பணம் ஆகியவற்றை மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மயிலம் போலீஸாா் அருண்மொழியை கைது செய்து சிறையிலடைத்தனா்.
காவல்துறை எச்சரிக்கை : இந்நிலையில் திருமணம் தகவல் மையம் மூலம் வரன் தேடும் பெண்கள் தங்களது புகைப்படம் மற்றும் விவகாரங்களை பாதுகாப்பான முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் எச்சரித்துள்ளது.