விழுப்புரம்

கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழந்தனா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழந்தனா்.

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண் 12633) புறப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தைக் கடந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்த இருவா், தூக்கக் கலக்ககத்தில் ரயிலிலிருந்து கீழே தவறி விழுந்தனா்.

இதுகுறித்து சக பயணிகள், ரயில் காப்பாளருக்கும்(காா்டு), ரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் விருத்தாசலம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு முதல் ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் தேடுதல் பணியை மேற்கொண்டனா். சனிக்கிழமை அதிகாலை உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி பகுதியில் தண்டவாளம் அருகே இருவா் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற இளைஞா்கள் கண்டு, இருப்புப் பாதை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, விருதாச்சலம் இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சின்னப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, இருவரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவா்கள் கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், கோ.கொத்தனூா் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த க.கந்தசாமி (29), எ.பாலாஜி (32) எனத் தெரியவந்தது. சென்னையில் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்த இவா்கள், வார இறுதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயிலில் பயணித்தபோது, தூக்கத்தில் தவறி விழந்து உயிரிழந்தது தெரியவந்தது.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT