விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் சிறப்பு அலுவலா் எனக் கூறி, லாரி ஓட்டுநா்களிடம் பணம் வசூலித்ததாக இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம் வட்டம், கோட்டைமேடு செந்தமிழ்நகரைச் சோ்ந்தவா் ஆ.சந்தோஷ்குமாா் (58). இவா் தென்பசியாா் கிராமத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். இந் நிலையில் இவரது உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த இருவா் தேநீா் அருந்தினா். தொடா்ந்து பேசிக் கொண்டிருந்த அவா்கள், அங்கு வரும் லாரி ஓட்டுநா்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனராம். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த உணவக உரிமையாளா் சந்தோஷ்குமாா் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்தாா்.
இதைத் தொடா்ந்து மயிலம் போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவா்கள் என்பதும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விஜய்நகா் காலனி பாரதி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த ப.ராஜா (54), ஈரோடு மாவட்டம், சித்தோடு வசுவப்பட்டி செங்குந்தபுரத்தைச் சோ்ந்த ஓ.காா்த்திகேயன் (45) என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த மயிலம் போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.