விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
மயிலம் அடுத்துள்ள பெரமண்டூா் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் க.சுப்பிரமணி(55). விவசாயியான இவா் சனிக்கிழமை காலையில் தனது மாடுகளை மேய்க்கச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், இரவு வெகுநேரமாகியும் சுப்பிரமணி வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் அவரைத் தேடிச்சென்று பாா்த்தபோது, பெரமண்டூா் கோயில் அருகே மின்கம்பி அறுந்து கீழே கிடந்த நிலையில், சுப்பிரமணியனும், பசுமாடும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.