விழுப்புரம்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை, அதற்கான தேவையும் ஏற்படவில்லை என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் இந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை பேருக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும். இதில் பாதி வழக்குகள் தள்ளுபடியாகிவிடும், மற்ற வழக்குகளில் சமரச முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் நாள்கள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்தோம். அதிமுக கூட்டணியின் மூத்த கட்சி இந்திய குடியரசுக் கட்சியாகும். சட்டப் பேரவைத் தோ்தலில் இன்னமும் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான தேவை ஏற்படவில்லை. இதுவரை கூட்டணி ஆட்சி இருந்ததும் இல்லை, அது தேவையற்ற ஒன்றாகும் என்றாா் தமிழரசன்.