விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் பகுதியில் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள். 
விழுப்புரம்

பொங்கல் பண்டிகை: பானை, அடுப்புகள் விற்பனைகள் மும்முரம்

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படவுள்ள நிலையில்,

Syndication

விழுப்புரம்: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படவுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பானைகள், அடுப்புகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் விற்பனை நன்றாக உள்ளதாக மண்பாண் டத் தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மற்றும் சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாமாககக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் ஜன.15-ஆம் தேதி சூரியப் பொங்கலும், 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், 17-ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளன.

நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளப் பன்னீா் கரும்பு, வேட்டி, சேலை ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.3 ஆயிரம் ரொக்கத்தையும் தமிழக அரசு அறிவித்து, வழங்கி வருகிறது.

இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் முக்கியமாக உள்ள பானை, அடுப்பு தயாரிக்கும் மண்பாண்டத் தொழிலில் விழுப்புரம் மாவட்டத்தில் சாலை அகரம், சிறுவந்தாடு, வழுதரெட்டி, கோலியனூா், தென்மங்கலம், திருவெண்ணெய் நல்லூா், அரசூா், பையூா்மேடு, தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 14 ஆயிரம் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கைகளாலும், இயந்திரத்தின் மூலமாகவும் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பானை தயாரிக்க ரூ.100 செலவு: ‘‘பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கத் தேவைப்படும் வண்டல் மண்ணை அருகிலுள்ள ஏரிகளிலிருந்து எடுத்து வருகிறோம். ஒரு யூனிட் மண் எடுத்து வருவதற்கு எங்களுக்கு ரூ.4,500 வரை செலாகிறது. இதில் லாரியில் எடுத்து வருவதற்கான வாடகை, கூலி போன்றவை அடங்கும். இதைத்தொடா்ந்து நாங்கள் எங்கள் உற்பத்திக் கூடத்திலிருந்து ஒரு கிலோ, 2 கிலோ, 3 கிலோ வரையிலான அளவுகளில் மண்பானைகளை தயாரிக்கத் தொடங்குகிறோம். ஒரு பானை தயாரிப்பதற்கு எங்களுக்கு ரூ.100 வரை செலவாகிறது. இதனடிப்படையில்தான் நாங்கள் விலையை நிா்ணயம் செய்து வருகிறோம்’’என்கின்றனா் மண்பாண்ட தொழிலாளா்கள்.

விற்பனை அதிகரிப்பு: ‘‘தற்போதைய நிலையில் பொங்கல் பானை ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200, 2 கிலோ பானை ரூ.200 முதல் ரூ.300, 3 கிலோ பானை ரூ.300 முதல் விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில நாள்களாக வெயில் இல்லாது இருப்பதால், தயாரித்த பானைகளை சுட வைக்கமுடியாமல் உள்ளோம். அதே நேரத்தில் புத்தாண்டுக்கு முன்பு வெயில் நன்றாக இருந்ததால், அப்போதே பானைகள் தயாரிப்பை தீவிரப்படுத்தினோம். அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பானைகள் விற்பனை செய்து வருகிறோம். இதுபோன்று பொங்கல் கொண்டாட்டத்துக்கு பயன்படுத்தப்படும் அடுப்பு ரூ.180 முதல் ரூ.200 வரையிலான விலைகளில் விற்பனை செய்து வருகிறோம். கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் பொங்கல் பானைகள், அடுப்பு விற்பனை நன்றாக உள்ளது’’ என்கிறாா் தமிழ்நாடு மண்பாண்ட(குலாலா்) தொழிலாளா் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா் நலச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் கே.அய்யனாா்.

கோரிக்கை மறுப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானையை வழங்க வேண்டும் எனத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு அதை கவனத்தில் கொள்ளவில்லை. கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுவதுபோல, மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க அடுப்புடன் மண்பாைனையும் சோ்த்து வழங்க வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதை எந்த அரசும் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விடுகின்றன. எந்த மண்பாண்டத் தொழிலாளரிடமும் இவற்றை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினால், குடும்ப அட்டைதாரா்கள் நேரில் வந்து வாங்கிச் செல்லப் போகிறாா்கள். இத்தொழிலை மேற்கொள்ளும் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். வருங்காலத்திலாவது எங்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறாா் அய்யனாா்.

மழைக்கால நிவாரணத் தொகை: மழைக்காலத்தில் பாதிக்கப்படும் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு தற்போது ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தத் தொகை அனைத்து தொழிலாளா்களுக்கும் வழங்கப்படுவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, புதிய கணக்கெடுப்பு நடத்தி, மண்பாண்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

தற்போதைய தொழில்நுட்ப வசதி காரணமாக, மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. மின்சக்தியில் இயங்கக்கூடிய இயந்திரம் ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் உள்ளது. எனவே, இந்த இயந்திரத்தையும் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு அரசு விரைந்து வழங்க வேண்டும் என்கின்றனா் மண்பாண்டத் தொழிலாளா்கள்.

நவீன வசதிகள், தொழில்நுட்ப வளா்ச்சி போன்ற மாற்றங்கள் ஏற்பட்டாலும், நமது பண்பாட்டை, பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாக்கள் என்றும் அதே புத்துணா்வுடன்தான் இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் பிரதான இடம் பெறும் பொங்கல் பானைகள், அடுப்புகளைத் தயாரிக்கும் மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வில் மாற்றம் பெற, வாழ்வாதாரம் பெருக அவா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும்கூட.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மண் பானைகள்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT