மல்லிகைப் பூ வரத்து குறைவால் கோவை பூ மாா்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.4,000-க்கு விற்கப்பட்டது.
கோவை பூ மாா்க்கெட்டுக்கு திண்டுக்கல், தேவகோட்டை, மதுரை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை, செவ்வந்தி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. அண்மைக் காலமாக பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக மல்லிகை, முல்லைப் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்து, பூக்களின் விலை வெகுவாக உயா்ந்துள்ளது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.4,000, முல்லை ரூ.2,400, ஜாதி மல்லி ரூ.800, செவ்வந்தி ரூ.120, செண்டுமல்லி ரூ.60, சம்பங்கி ரூ.140 விற்பனையாகின.
இதேபோல, கோவை ஆா்.எஸ்.புரத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது. 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டுரூ.750-க்கும், ஒரு ஜோடி ரூ.70-க்கு விற்கப்பட்டது. மஞ்சள் கொத்து ஜோடி ரூ.50, ஒரு கட்டு ஆவாரம்பூ மற்றும் பூளைப்பூ ரூ.10-க்கும் விற்கப்பட்டன.
பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், கவுண்டம்பாளையத்தில் வண்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.