விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 640 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்து, பல்வேறு உதவித் தொககள், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வீடு கட்டும் திட்டம், தொழில் தொடங்க கடனுதவி போன்ற கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 356 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில்பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) ரவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தனித்துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன்,மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தனி ஊராட்சி கோரிக்கை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் குருவம்மாபேட்டை கிராம நாட்டாமை மோ.சிங்கப்பெருமாள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: மரக்காணம் ஒன்றியம், எண்டியூா் ஊராட்சிக்குள்பட்ட குருவம்மாபேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நியாயவிலைக் கடை அமைந்துள்ளன. ஆனாலும், கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. அரசின் சலுகைகளும் எங்கள் கிராம பொதுமக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. எண்டியூா் ஊராட்சியிலிருந்து குருவம்மாபேட்டையைப் பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம ஊராட்சியைப் பிரிப்பது தொடா்பாக, கிராம சபைக் கூ ட்டத்தில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஊராட்சியைப் பிரித்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 277 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 7 மனுக்களும் என மொத்தம் 284 மனுக்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பெற்றுக்கொண்டு, மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் உயா் கல்வி பயிலும் பாா்வைத்திறன் குறையுடையோா், செவித்திறன் குறையுடைய 4 பேருக்கு ரூ.57,960 மதிப்பீட்டில் கைப்பேசி, பிரெய்லிடி வாட்ச், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,14,400 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண்கள் 6 பேருக்கு சுயதொழிலுக்காக ரூ.38,151 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.