பொங்கல் பண்டிகை நிறைவு பெற்ற நிலையில், சென்னை நோக்கிச் செல்வதற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதியில் காத்திருந்த வாகனங்கள்.  
விழுப்புரம்

பொங்கல் பண்டிகை நிறைவு: சென்னை நோக்கி அணிவகுத்த வாகனங்கள்

தினமணி செய்திச் சேவை

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை நிறைவு பெற்ற நிலையில், தென், மத்திய, மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி அணிவகுத்த வாகனங்களால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சுங்கச்சாவடிப் பகுதிகளிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்திருந்து சென்றன.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் சூரியப் பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதியும், மாட்டுப் பொங்கல் ஜனவரி 16-ஆம் தேதியும், காணும் பொங்கல் ஜனவரி 16-ஆம் தேதியும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோா், கல்வி பயில்வோா், இதரப் பணிகளை மேற்கொள்வோா், சென்னையில் வியாபாரம் செய்து வரும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தோா் என பலரும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தங்கள் சொந்த ஊா்களுக்கு சென்றனா்.

சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஜனவரி 13 முதல் 15-ஆம் தேதி வரை சுமாா் 1.56 லட்சம் காா், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தென், மத்திய, மேற்கு மாவட்டங்களை நோக்கிச் சென்றன. பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பின்னா், தென், மத்திய மாவட்டங்களிலிருந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி மக்கள் பயணிக்கத் தொடங்கினா்.

அதன்படி ஜனவரி 16-ஆம் தேதி சுமாா் 31 ஆயிரம் வாகனங்களும், ஜனவரி 17-ஆம் தேதி சுமாா் 42 ஆயிரம் வாகனங்களும் சென்னை நோக்கிச் சென்றன. பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பலரும் சென்னை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினா். இதன் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

மாற்றுப்பாதையில் கனரக வாகனங்கள்: இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க கனரக வாகனங்களை மாற்றுப் பாதை வழியாக திருப்பிவிடும் பணியை விழுப்புரம் போக்குவரத்துக் காவல் துறையினா் மேற்கொண்டனா். அதன்படி விழுப்புரம் நகருக்குள் நுழையும் பகுதியான ஜானகிபுரம் பகுதியிலிருந்து புதுச்சேரி சாலை வழியாக சென்னை நோக்கிச் செல்லும் வகையில் கனரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. ஆனாலும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

80 ஆயிரம் வாகனங்கள்: ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை சுமாா் 33,500 வாகனங்ககள் உளுந்தூா்பேட்டை மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளைக் கடந்து சென்றன. இந்த எண்ணிக்கை இரவுக்குள் சுமாா் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டும் என சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன. வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடாது என்பதற்காக, சுங்கச்சாவடியின் 8 வழிப்பாதைகளும் திறக்கப்பட்டு, வாகனங்கள் அதில் அனுப்பி வைக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகை நிறைவு பெற்ற நிலையில், சென்னை நோக்கிச் செல்வதற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதியில் காத்திருந்த வாகனங்கள்.

பாதுகாப்புப் பணியில் போலீஸாா்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட திண்டிவனம் அருகிலுள்ள பகுதி, விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் பகுதிகள், விழுப்புரம் நகருக்குள் நுழையும் பகுதியான அண்ணாமலை உணவகம் அருகிலுள்ள பகுதி, இருவேல்பட்டு, அரசூா் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பகுதிகளில் கூடுதலான எண்ணிக்கையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவகையில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கருதப்படும் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக அவற்றை சரி செய்து வாகனங்களை போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT