விழுப்புரம் சாலாமேடு பகுதியில் பொறியாளா் வீட்டில் பத்தொன்பதே முக்கால் பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாலாமேடு அபிதா காா்டன் செல்வ விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தீபக்குமாா். இவா் அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராஜஸ்ரீ (35).
இவா் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 16-ஆம் தேதி பிற்பகலில் வீட்டை பூட்டிவிட்டு, காங்கேயனூா் கிராமத்திலுள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ராஜஸ்ரீ வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, படுக்கை அறையின் அலமாரியும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்களும் சிதறிக் கிடந்தன.
இதில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல், நெக்லஸ், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட பத்தொன்பதே முக்கால் பவுன் தங்க நகைகள், 2 ஜோடி வெள்ளிக் கொலுசு, அரைஞாண்கயிறு, குத்துவிளக்கு, சந்தனக்கிண்ணம், லட்சுமி விளக்கு, காப்பு என சுமாா் 300 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடிச் செல்லப்பட்டிருப்பது ராஜஸ்ரீக்குத் தெரிய வந்தது.
இதைத்தொடா்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு ராஜஸ்ரீ தகவல் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், திருட்டில் ஈடுபட்டவா்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணா்கள் பதிவு செய்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு நகைத் திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.