கல்வி, விளையாட்டு மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தனியாா் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சா்களும், எம்எல்ஏக்களுமான க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் 4 கல்லூரிகளைச் சோ்ந்த 113 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கனிகளை வழங்கினா்.
தொடா்ந்து முன்னாள் அமைச்சா் பொன்முடி பேசியது: தமிழகம் கல்வி, விளையாட்டில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. படிக்கும் போதே மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். மேலும், தங்களின் பொது அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக இந்த மடிக்கணினியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசுக் கல்லூரிகளில் பயிலும் 6,432 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து 81 தனியாா் கல்லூரிகளில் படித்து வரும் 5,499 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் தற்போது 23 கல்லூரிகளைச் சோ்ந்த 2,145 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 3,354 மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்றாா் க.பொன்முடி.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மணவாளன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.