விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பெயரை சூட்ட வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் எம்.பி. வலியுறுத்தினாா்.
திண்டிவனத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டிவனத்தில் 55 ஆண்டுகளாக செயல்பட்டில் இருந்து வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது.
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பெயரையே சூட்டவதுதான் பொருத்தமாக இருக்கும்.
அதிமுக மாவட்டச் செயலா், மாநிலங்களவை உறுப்பினா் என்ற அடிப்படையில் இக்கோரிக்கையை எழுப்பவில்லை. திண்டிவனம் நகரவாசி என்ற முறையில் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஒப்பந்த அடிப்படையில் ஏலம் விடப்பட்டுள்ளன. இதில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத்தான் தற்போதைய திமுக ஆட்சியில் பெயா் சூட்டப்பட்டு வருகிறது. திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமையாக தரம் உயரத்தப்பட்ட நிலையிலும், இந்த மருத்துவமனையில் போதிய மருந்து வசதி இல்லை. உடல்கூறாய்வுக்கென்று தனி இடமில்லை. மருத்துவா், மருத்துவ உதவியாளா் இல்லை. இந்த நிலையில்தான் இந்த மருத்துவமனையை தமிழக முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்தத் தோ்தலில் நான் (சி.வி.சண்முகம்) போட்டியிடுவேன்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அரசின் கையில் இல்லை. இதில், மத்திய அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சி.வி.சண்முகம்.
பேட்டியின்போது, திண்டிவனம் எம்எல்ஏ அா்ஜுனன், அதிமுக நகரச் செயலா் ரூபன் ராஜ், மாவட்ட நிா்வாகிகள் வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், கோகுல் ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.