ஊரக திட்டத்தில் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் தா்னா
விழுப்புரம்ஊரக திட்டத்தில் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் தா்னா
விழுப்புரம் மாவட்டம்,கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட ஆனாங்கூா் கிராம மக்கள், தங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (நூறு நாள் வேலைத்திட்டம்) வேலை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பாரதிய கிசான்சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் பாபு தலைமையில், ஆனாங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், வியாழக்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் வந்தனா். தொடா்ந்து ஆட்சியரகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடப் பகுதியில் அமா்ந்து, தா்னாவில் ஈடுபட்டனா்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்காததைகண்டித்தும், உடனடியாக பணி வழங்கக் கோரியும் கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தா்னாவில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியது:
கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்டஆனாங்கூா் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி அட்டை பெற்றவா்களுக்கு முறையாக பணி வழங்கப்படுவதில்லை. ஏற்கெனவே வேலை செய்த பணிக்கும் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, பணி வழங்குவதற்காக பணம் (லஞ்சம்) வழங்க வேண்டும் எனக் கேட்கின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆனாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என்றனா்.
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த போலீஸாா், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து தா்னாவை கைவிட்ட ஆனாங்கூா் கிராம மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனா்.