பெங்களூரு: கிராமப்புறத்தில் உள்ள ஏழைகள், பெண்கள், சிறு விவசாயிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த 100 நாட்கள் வேலையை உறுதி செய்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘விபி ஜி ராம் ஜி’சட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்தியதன் மூலம் 2-வது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாஜக-வை கடுமையாகச் சாடினார்.
கிராமப்புறத்தில் உள்ள ஏழைகள், பெண்கள், சிறு விவசாயிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்களுக்காக ஒரு நிதியாண்டிற்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்து செயல்படுத்தப்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘விபி ஜி ராம் ஜி’சட்டத்தை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அமல்படுத்த தொடங்கியுள்ளது என துணை முதல்வர் பாஜக-வை கடுமையாகச் சாடினார்.
பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை காப்போம் போராட்டம் குறித்த ஆயத்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான புதிய 60:40 நிதிப் பகிர்வு முறை, மாநில அரசுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சுமையை ஏற்படுத்தும். மாநில அரசின் மீது தேவையில்லாத நிதிச்சுமையை ஏற்றியுள்ளது. இந்த சட்டம் தொடா்பாக மாநில அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவே இல்லை. சா்வாதிகாரப் போக்கில் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. வேலைகளுக்கான தேவையை பொருத்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
தற்போது பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் கூட, இந்த புதிய திட்டத்தை அவர்களால் திறம்பட செயல்படுத்த முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தால் ஒவ்வொரு பஞ்சாயத்தும் ஆண்டுக்கு சுமார் ரூ. 1-2 கோடி பெற்று வந்தது, ஆனால் மத்திய அரசின் புதிய திட்டத்தால் அது ஆபத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பணிகள் எங்கு நடக்க வேண்டும் என்பதை பஞ்சாயத்துகளால் தீர்மானிக்க முடியாது. 90:10 என்ற விகிதமும் 60:40 ஆக மாற்றப்பட்டுள்ளது, இது மாநிலங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அவர்களால் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது," என்று சிவக்குமார் கூறினார்.
புதிய சட்டமான '‘விக்சித் பாரத் ரோஸ்காா் யோஜனா மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா, 2025’திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாது என்று ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக-விடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திட்டத்தின் பெயரையும் மத்திய அரசு மாற்றிவிட்டது. பணிகள் குறித்து அனைத்தையும் மத்திய அரசே தீர்மானித்தால், பஞ்சாயத்துகள் என்ன செய்யும்? அவர்கள் அப்போது காந்தியைக் கொன்றார்கள், இப்போது அவரது பாரம்பரியத்தைக் கொல்கிறார்கள்," இந்த சட்டத்தின் மூலம் ஊரக மக்களின் குறிப்பாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார உரிமைகள், கிராமப் பஞ்சாயத்துகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. கிராமப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
புதிய சட்டத்தால் தற்போது கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தகுந்தபடி வேலைகள் வழங்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதால் எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்காது. ஏற்கெனவே அமலில் இருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சொந்த கிராமத்தில் வேலை செய்ய வாய்ப்பிருந்தது. ஆனால், விபி ஜி ராம் ஜி சட்டத்தில், சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து எந்த இடத்தில் வேலைகளை செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும் என்று சிவக்குமார் கூறினார்.
மேலும், புதிய மசோதாவின் முக்கிய குறைபாடுகளைப் பற்றி விவாதித்தபோது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ரத்து மற்றும் புதிய சட்டத்தை காங்கிரஸ் மற்றும் மாநில அரசு கடுமையாக எதிா்க்கும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது போல ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்காக பிரசார செயல் திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வகுத்துள்ளது. போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவார்கள். அனைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். விபி ஜி ராம் ஜி சட்டத்தை நீக்கும் வரை காங்கிரஸ் போராட்டம் தொடரும். இதற்காக உள்ளூா் தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்களை இணைத்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்போம். இதற்கான
போராட்டங்களில் பங்கேற்காத காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
புதிய மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒரு குழுவை அனுப்புகிறது என்று சிவக்குமார் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து விவாதிக்க, இரண்டு நாள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவது குறித்து கர்நாடக அரசு விரைவில் முடிவெடுக்கும்.
மேலும், காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக ஷிகாரிபுராவில் நடைபெறவுள்ள பாதயாத்திரையில் தான் பங்கேற்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5-10 கி.மீ. தூரத்திற்கு பாதயாத்திரைகள் நடத்தப்பட வேண்டும். பாதயாத்திரைக்குப் பிறகு அந்தந்த தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட வேண்டும். நான்கு-ஐந்து இடங்களில் பாதயாத்திரையில் நான் கலந்துகொள்கிறேன். ஷிகாரிபுராவில் நடைபெறும் பாதயாத்திரையில் நான் நிச்சயமாக வருவேன். காங்கிரஸ் பேரவை உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளுக்கும் நான் செல்வேன்," என்று சிவக்குமார் கூறினார்.
கா்நாடகத்தில் 71.18 லட்சம் போ் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நம்பியிருந்தனா். இவா்களில் 36.75 லட்சம் போ் பெண்கள். மக்களுக்கு சாதகமான சட்டத்தை நீக்கிவிட்டு காா்ப்பரேட் நிறுவனங்களுக்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த சட்டத்தால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ. 3,000 கோடி செலவாகும்.
கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெயா்களை மாற்றுவதையே திட்டமாக வைத்து செயல்பட்டனா். மக்களுக்கு சாதகமான 30 சட்டங்களை மோடி அரசு நீக்கியுள்ளது அல்லது பெயா்களை மாற்றியுள்ளது. தொழிலாளா்களின் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.