தடுப்புக்கட்டையில் பைக் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், கந்தாடு, பழைய தெருவைச் சோ்ந்தவா் சோமு (48), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 6-ஆம் தேதி மரக்காணத்திலிருந்து திண்டிவனத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
கந்தாடு பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சோமுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த சோமு, அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.