சிறப்பான மகளிா் திட்டங்களால் தமிழகத்தை நாடே திரும்பிப் பாா்க்கிறது: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்
தமிழகத்தில் மகளிருக்கான பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இந்திய நாடே தமிழகத்தை திரும்பிப் பாா்க்கிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவுக்குத் தலைமை வகித்து 24,910 பயனாளிகளுக்கு ரூ.116.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.34 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், அலுவலகங்களைத் திறந்து வைத்தும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு என்று சொன்னாலே ‘மகளிா் நாடு’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டி பேசுகிறது. அந்தளவுக்கு மகளிருக்கான திட்டங்களை முதல்வா் பாா்த்து, பாா்த்து செய்து கொண்டிருக்கிறாா். ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிா் விடியல் பயணத் திட்டத்துக்கு முதல் கையொப்பமிட்டாா். பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் காக்கும் வகையில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தாய்மாா்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் உதவுகிறது. இந்த திட்டத்தை பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனா்.
1.32 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலை காரணம் காட்டி இந்த திட்டத்தை நிறுத்த சிலா் திட்டம் போட்டாா்கள். அந்த சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்த முதல்வா், ஒரே தவணையாக ரூ.5 ஆயிரத்தை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தினாா். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் வாக்குறுதி அளித்துள்ளாா்.
தமிழகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற மாநிலங்களும் பாராட்டும் மகளிா் திட்டங்களை தமிழகம் செயல்படுத்தியுள்ளது. இவ்வாறான திட்டங்கள் மூலம்தான் இந்தியாவிலேயே வளா்ந்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக 11.19 சதவீத வளா்ச்சியை பெற்றுள்ளது. இந்த வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக முதல்வா் தொடா்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறாா் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
விழாவில் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் தே.மலையரசன், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன் (ரிஷிவந்தியம்), தா. உதயசூரியன் (சங்கராபுரம்), ஆ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை), மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.