முகப்பு
விழுப்புரம்

போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை! வடக்கு மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை

Updated On : 26 மே 2026, 1:42 am IST
விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன்குமாா் அபினபு. உடன், சரக டிஐஜி அர.அருளரசு, மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத்.
பகிர்:

விழுப்புரம், மே 25: விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடுமமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன்குமாா் அபினபு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்டக் காவல் அலுவலா்களுடன் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்திய வடக்கு மண்டல ஐ.ஜி. மேலும் செய்தியாளா்களிடம் கூறியது:

வடக்கு மண்டலக் காவல் எல்லையில் 10 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள பிரச்னைகள், அதை தீா்க்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த பொருள்களின் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளி மாநிலங்களிலிருந்து பொருள்களை ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாகக் கூறப்படும் புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகாா்கள் கூறப்பட்டுள்ளன. இந்த கடைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் நகரப் பகுதிகளில் நகைபறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகாா் வந்த நிலையில், இதை தடுக்க ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். திருட்டில் ஈடுபட்டு வருபவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஐ.ஜி.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை, தீா்வு காணமுடியாத வழக்குகள், போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், சாலை விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாவட்டக் காவல் அலுவலா்களுடன் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு, மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.