கடலூர்

65 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

DIN

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 65 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.21.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று, 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.14.67 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி 30 பேருக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலும், குறைபார்வையுள்ள 10 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.20 லட்சத்தில் உருப்பெருக்கிகளையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 135 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. 8-ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைபார்வையுள்ள மாணவ, மாணவிகளுக்கு எழுத்தினை பெரிதாக்கிக் காட்டும் உருப்பெருக்கிகள் அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் (பொ) உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத் திறனாளி தம்பதியர் புகார்: கடலூர் ராஜாபேட்டையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தம்பதியர் சிவபாலன் - இலக்கியா. இவர்களுக்கு அரசின் நலத் திட்ட உதவி கிடைக்கப்பெறாததால் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்தனராம். ஆனால், அமைச்சரை சந்திக்க விடாமல் தங்களை தனி அறையில் வைத்துப் பூட்டியதாகவும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே அனுப்பியதாகவும் ஆட்சியரகத்தில் புகார் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி கூறுகையில், மோட்டார் சைக்கிள் வழங்கும் பயனாளிகள் தேர்வுப் பட்டியலில் அவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை என்ற காரணத்தால் பொய்யான தகவல்களைக் கூறுகின்றனர். அவர்களது சங்கங்களுக்குள் ஏற்படுகிற பிரச்னையின் வெளிப்பாடு இது. மற்றப்படி அலுவலகத்துக்குள் அவர்களை வைத்து பூட்டி வைத்த சம்பவம் நடைபெறவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT