கடலூர்

மதுப் பிரியர்களின் வசதிக்காக ஆற்றில் மின் விளக்குடன் அமைக்கப்பட்ட பாதை! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?

தினமணி

மதுப் பிரியர்களின் வசதிக்காக தென்பெண்ணையாற்றில் தனி நபர்களால் பாதை அமைத்து மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் எல்லையாக புதுச்சேரி மாநிலம் அமைந்துள்ளது. கடலூரை விட புதுச்சேரியில் மது விலை குறைவாக உள்ளதால் கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மதுப் பிரியர்கள் மது குடிப்பதற்காக புதுச்சேரிக்கு செல்வதுண்டு. இவ்வாறு வருபவர்களை குறிவைத்து, தென்பெண்ணையாற்றின் கரையில் ஏராளமான மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றாக வெளி செம்மண்டலத்தின் நேர் எதிரில் கும்தாமேட்டில் மது, சாராயக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடைகளுக்கு வெளி செம்மண்டலம் பகுதியிலிருந்து எளிதில் சென்று வர வசதியாக ஆற்றுக்குள் மணல் மூலம் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் ஒருபகுதி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதால் உரிய அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட தரைப்பாலத்தை மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது அகற்றுவது வழக்கம். எனினும் இந்தப் பாலம் அடுத்த சில நாள்களில் மீண்டும் அமைக்கப்படும்.

அதன்படி அண்மையில் இந்தப் பாலத்தின் ஒருபகுதி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பாலம் சீரமைக்கப்படவில்லை. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மதுப் பிரியர்கள் ஆற்றுக்குள் இறங்கி நடந்தே கும்தாமேடு சென்று வந்தனர். இவ்வாறுச் செல்லும் மதுப் பிரியர்களின் வசதிக்காக தற்போது கும்தாமேடு பகுதியில் மதுக்கடை நடத்துவோர் ஆற்றுக்குள் மின்விளக்கு அமைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர். புதுச்சேரி எல்லையிலிருந்து கடலூர் மாவட்ட எல்லை வரை மின்வசதியுடன் விளக்கு அமைத்து இரவில் வெளிச்சம் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரின் கண்காணிப்பும் போதிய அளவில் இல்லாததால் மது கடத்தலும் நடைபெறுகிறதாம். ஆற்றில் தண்ணீர் வரும் நாள்களில் மதுபோதையில் தண்ணீருக்குள் தவறி விழுந்து இறப்புகளும் ஏற்பட்டுள்ளன.

எனவே, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT