சுற்றுலாப் படகுகளை இயக்குவதில் அரசுத் துறைகள் இடையே போட்டா போட்டி!
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் படகு இயக்குவதில் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கும், வனத் துறைக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் படகு இயக்குவதில் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கும், வனத் துறைக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.
கிள்ளை பிச்சாவரத்தில் 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கால்வாய்களில் மாங்குரோவ், தில்லை செடிகள் உள்ளிட்ட மூலிகைத் தாவரங்கள் படர்ந்து கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இயற்கை அரணாக அமைந்துள்ளது.
எனவே, வனப் பகுதிகளைப் பாதுகாக்க இந்த இடத்தை சுற்றுலாத் தலமாக தமிழக அரசு அறிவித்தது.
அதன் பின்னர், படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டதால், பிற மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது சுற்றுலாத் துறையின் கீழ் 13 இயந்திரப் படகுகள், 40 துடுப்புப் படகுகள் என மொத்தம் 53 படகுகள் இயக்கப்படுகின்றன.
துடுப்புப் படகில் இருவர் சுற்றிப் பார்க்க ஒரு மணி நேரத்துக்கு ரூ. 189, இயந்திரப் படகில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு பயணிகளுக்கு ரூ. 1,289 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
தற்போது வனத் துறை சார்பில், சூழல் சுற்றுலா தொடங்கப்பட்டு படகு சவாரி அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரு துறையினர்இடையே அவ்வப் போது பிரச்னை ஏற்படுவதும், பின்னர் சமரசம் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால், கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சுற்றுலாத் துறையைவிட, வனத் துறையினர் படகு சவாரிக்கு கட்டணத்தைக் குறைத்தும், மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையும் அறிவித்து அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
இதனால், பயணிகள் வனத் துறை படகையே விரும்புகின்றனர். எனவே, இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இதைச் சாதகமாக்கி மிகக் குறைந்த கட்டணத்தில் தனியார் படகுகள் இயக்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து படகோட்டிகள் சங்கத் தலைவர் ராஜா கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக சுற்றுலாத் துறை சார்பில் படகு சவாரி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென வனத் துறையினர் கட்டணத்தைக் குறைந்து படகு இயக்குவது கண்டிக்கத்தக்கது.
அரசு சார்பில், பாதுகாப்பு என்ற விளம்பரம் மட்டும் செய்யப்படுகிறது. ஆனால், வனத் துறை படகில் கட்டுப்பாடில்லாமல் பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால், பயணிகளுக்கான பாதுகாப்பு குறைவதுடன், அரசுக்கும் வருவாய் இழப்பும் ஏற்படு
கிறது.
மேலும், வனத் துறையினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.