கடலூர்

என்எல்சி-யில் பயிற்சி பெற்றவர்கள் ஆட்சியரிடம் சான்றிதழ் ஒப்படைப்பு

தினமணி

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி, படிப்பு சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 நெய்வேலியில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில், கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சி பெற்றவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பணிக்காக காத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காக தங்களது நிலம், வீடு ஆகியவற்றை வழங்கியவர்களாவர்.
 இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு என்எல்சி-யில் பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
 பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்எல்சி-யில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் என்எல்சி-க்காக வீடு, மனை வழங்கியவர்களுக்கும், ஐடிஐ படித்துவிட்டு என்எல்சி-யில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்து அதற்கான சான்று பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.
 ஆனால், தற்போது வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும், ஐடிஐ படித்து தொழில் பழகுநர் பயிற்சிக்காகச் சென்றவர்களுக்கு வேறு துறையில் பயிற்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் வேறு நிறுவனங்களுக்கும் பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
 தற்போதைய சூழலில் என்எல்சி நிறுவனத்தில் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்று வரும் நிலையில் புதிய பணி வாய்ப்புகள் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி படிப்புச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கூறினர். அதன்படி ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்ததோடு, தங்களது சான்றிதழ்களையும் ஒப்படைத்தனர்.
 அப்போது ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறியதாவது: என்எல்சி அதிகாரிகளுடன் இந்தப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். வேலைவாய்ப்பு வழங்குவதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும்.
 எனவே, இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார் அவர்.
 இதனையடுத்து அவர்கள் தங்களது சான்றிதழ்களை திரும்பப் பெற்றுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT