முகப்பு
கடலூர்

ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்னா

என்எல்சி விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை எனக் கூறி கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

என்எல்சி விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை எனக் கூறி கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
 என்எல்சி நிறுவனம் 2-ஆவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விருத்தாசலம் வட்டத்துக்குள்பட்ட ஊ.ஆதனூர், கம்மாபுரம், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள், வீட்டு மனைகளை கையகப்படுத்தி வருகிறது.
 இந்த நிலையில் ஊ.ஆதனூர் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.
 அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்கள் பெற ஆட்சியர் வெளியே வந்த போது, கிராம மக்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊ.ஆதனூரில் 260 குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கிறார்கள். தற்போது அனைத்து வீடுகளையும் உடனடியாகக் காலி செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். தற்போது அரசின் பொதுத் தேர்வுகளும், விரைவில் மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் வீடுகளை காலி செய்ய வலியுறுத்துவது குழந்தைகளின் கல்வித் தேர்ச்சியை பாதிக்கும். மேலும், கையகப்படுத்தும் நிலம், வீட்டுமனைகள், வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. இதனை உயர்த்த வேண்டுமென நிலம், வீடு, மனை உரிமையாளர்கள் சங்கம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் முடிவு ஏற்பட்டு உரிய இழப்பீடு தொகை வழங்கினால் வீடுகளை காலி செய்வோம். அதுவரையில் காலி செய்ய இயலாது என மனுவில் கூறியிருந்தனர்.
 விருத்தாசலம்: இதற்கிடையே இந்தக் கிராமத்தினர் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.