நெய்வேலி அருகே மதுக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
கம்மாபுரம் ஒன்றியம், கொல்லிருப்பு ஊராட்சிக்கு உள்பட்டது கைக்களர்க்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தின் குடியிருப்புப் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மது இல்லா ஊராட்சியாக உருவெடுத்துள்ள வடக்குத்து ஊராட்சியை முன்மாதிரியாகக் கொண்டு, கொல்லிருப்பு ஊராட்சி முக்கிய பிரமுகர்கள் வடக்குத்து ஊராட்சி முன்னாள் தலைவரும், மதுக்கடை ஒழிப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான கோ.ஜெகனை சந்தித்து ஆலோசனை பெற்றனர்.
அதன் பேரில் கடந்த மே 1-ஆம் தேதி நடந்த கொல்லிருப்பு ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில், கைக்களர்க்குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், புதன்கிழமை அந்தப் பகுதி சமூக ஆர்வலர் செந்தில் தலைமையில் பெண்கள் திரண்டு அரசு மதுபானக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலால் டிஎஸ்பி குமார், ஆய்வாளர்கள் சீனுவாசன், ஆரோக்கியராஜ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 15 நாள்களுக்குள் கடை அப்புறப்படுத்தப்படும், அதுவரை கடை மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், போலீஸார் முன்னிலையில் கடை மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.