வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடக்கம்
கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பும் பணி புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.
கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பும் பணி புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதமும், நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழைநீர் விநாடிக்கு 589 கன அடி வீதமும் என 5 நாள்கள் வந்தன. இதன் காரணமாக நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்த்து.
ஏரியின் மொத்தக் கொள்ளளவான 47.50 அடியில், தற்போது 45.10 அடியாக உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் ஒரு பகுதி கொள்ளிடம் ஆற்றின் வழியாக தஞ்சை மாவட்டம் கீழணையில் தேக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அக்டோபர் மாதம் 26 -ஆம் தேதி திறக்கப்பட்டு வந்தடைந்து. ஏற்கெனவே தேக்கப்பட்ட தண்ணீரும், தற்போதைய மழைநீரும் சேர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தியது.
தற்போது பெய்த மழையியால் விவசாயத்துக்குத் தண்ணீர் தேவையில்லாததால், சென்னைக்குக் குடிநீருக்காக புதன்கிழமை காலை 8 மணிக்கு சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் நீர்வாங்கி நெடும்மாடம் என்ற இடத்திருந்து நீறேற்றும் நிலையம் வாயிலாக விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பும் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தொடங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதம் வீராணம் ஏரி நீரின்றி வறண்டதால், சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, வீராணம் ஏரி நிரம்பியதால், குடிநீர் அனுப்பும் பணி புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.