கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய பாமகவினர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி புதன்கிழமை நடைபெற உள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு, பாமகவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி புதன்கிழமை நடைபெற உள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு, பாமகவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசைக் கண்டித்தும், பாமக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஏப்.11-இல் (புதன்கிழமை) கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில், அந்தக் கட்சியினர் திங்கள்கிழமை மாலையில் கடலூர், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் பகுதிகளில் கடவீதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
பாமக மாநில துணை பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலர் இள.விஜயவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொது வேலைநிறுத்தத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.