முகப்பு
கடலூர்

சமரசத் தீர்வு மையத்தில் வழக்குகளுக்கு செலவின்றித்  தீர்வு காணலாம்: மாவட்ட நீதிபதி

சமரசத் தீர்வு மையத்தில் செலவின்றி வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என்றார் முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 5:04 AM
பகிர்:

சமரசத் தீர்வு மையத்தில் செலவின்றி வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என்றார் முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி.
கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மையத்தில், சமரசம் குறித்தான விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, கடலூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் பங்கேற்று, சமரச தீர்வு மைய பெயர்ப் பலகையை திறந்து வைத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி பேசியதாவது: தமிழ்நாடு சமரச தீர்வு மையம் சென்னை உயர் நீதிமன்றத்தால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாகிறது. சமரச தீர்வு மையம் என்பது, அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாகும். சமரசம் மூலமாக வழக்குகளுக்குத் தீர்வு காண்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. பணம், நேரம் ஆகியவை விரையமாகாமல் விரைவில் தீர்வு காண்பதற்காக இந்த மையம் செயல்படுகிறது. 
சமரச தீர்வு முறை இரு தரப்பினரையும் வெற்றி பெற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. 
நீதிமன்றத்தால் சமரச தீர்வு மையத்துக்கு பரிந்துரை செய்யப்படும் வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். 
சமரச தீர்வு மையத்தில் செலவு ஏதுமின்றி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். இதில், நீதிமன்ற கட்டணம் முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மாவட்ட நிர்வாகத்துக்குள்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, மகளிர் குழுக்கள் மற்றும் ஏனைய துறைகளின் மூலம் பொதுமக்களிடையே சமரச தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ள வழக்குகளில் விரைவாகவும், இருதரப்புக்கும் சாதகமாகவும் சமரச தீர்வு மையத்தின் மூலமாக தீர்வு காண்பதே சரியான முடிவாகும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான என்.சுந்தரம், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள், நீதித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.