நீர்தேக்கத் தொட்டி இயக்குவோர் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குவோரின் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குவோரின் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் படி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிஐடியூவுடன் இணைக்கப்பட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை அமல்படுத்தக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்து திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் திரளானோர் குவிந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்திருந்தனர். எனினும் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, சிஐடியூ மாநிலச் செயலர் பி.கருப்பையன் தலைமையில் நிர்வாகிகள் பாபு, ஆளவந்தார், சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் வே.ப தண்டபாணியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அமைக்க, கடந்த 2014-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய மறு நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி 11-10-2017 அன்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியமாக ரூ.355, குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,618 வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே பலமுறை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான அரசாணை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.