சிதம்பரம் அருகே முதலை கடித்ததில் ஒருவர் சாவு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நந்திமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றவரை முதலை கடித்ததில் அவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நந்திமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றவரை முதலை கடித்ததில் அவர் உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (50). இவர், செவ்வாய்க்கிழமை இரவு பழைய கொள்ளிடம் (உப்பனாற்றில்) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருடன் மேலும் சிலரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
யாரும் எதிர்பாராத வகையில் இரு முதலைகள் திடீரென ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முனுசாமியைக் கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் சப்தமிட்டனர். உடனடியாக அந்தப் பகுதியினர் படகு மூலம் முதலை இழுத்துச் சென்ற பகுதிக்கு ஆயுதங்களுடன் சென்றனர். ஆனால், அதற்குள் முனுசாமியின் முதுகு, கால் பகுதிகளைக் கடித்து குதறிவிட்டு அந்த முதலை தப்பிவிட்டது. இதில், முனுசாமி இறந்தார். படகில் சென்றவர்கள் அவரது உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
தகவலறிந்த குமராட்சி காவல் உதவி ஆய்வாளர் உலகநாதன் சம்பவ இடத்துக்கு வந்து முனுசாமியின் உடலை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.