முகப்பு
கடலூர்

11 ஆண்டுகளாக அளித்த மனுக்களின் நகல்களுடன் ஆட்சியரிடம் பெண் முறையீடு!

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளாக அளித்த மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி வந்து, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை தாய்-மகன் மனு அளித்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளாக அளித்த மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி வந்து, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை தாய்-மகன் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கூத்துக்குடியைச் சேர்ந்த மாயவன் மனைவி குண்டுப்பிள்ளை (64). 
இவர் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தனது மகன் முனுசாமியுடன் (37) மனு அளிக்க வந்தார். அப்போது அவர்கள் 3 பைகளில் மனுக்களின் நகல்களை வைத்திருந்தனர். 
இருவரும் கூறுகையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், ஐவதுகுடியில் தங்களுக்குச் சொந்தமான 2.40 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துவிட்டதாகவும், இதுதொடர்பாக கடந்த 11 ஆண்டுகளாக தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களிடம் அளித்த மனுக்களின் நகல்கள் மட்டும் 13 கிலோ வரை உள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த மனுக்களை தலையில் சுமந்து வந்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணியிடம் அளித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர், உங்களது பெயரே குண்டுப்பிள்ளை தானா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குண்டுப்பிள்ளை, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் எனது பெயருக்கு ஏற்றார்போலவே இருந்தேன். மனு கொடுக்க அலைந்து, அலைந்தே தற்போது இளைத்துவிட்டேன். நீங்களாவது இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றார்.
மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →