வருவாய்த் தீர்வாயத்தில் 13 ஆயிரம் மனுக்கள்
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) திங்கள்கிழமை வரை 13 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) திங்கள்கிழமை வரை 13 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும் 1427-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு வட்டத்திலும் அதன் பிர்காவிலுள்ள கிராமங்களைப் பொறுத்து புதன்கிழமை (மே 16) வரை இந்தத் தீர்வாயம் நடைபெறுகிறது.
இதில், மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வார்கள். அதன்படி, சிதம்பரம் வட்டத்துக்கான தீர்வாயத்தை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்து நடத்தி வருகிறார்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை (மே 14) வரை நடைபெற்ற ஜமாபந்தியில் 12,937 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 2,654 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, 1,328 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,955 மனுக்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் அதிகபட்சமாக உதவித் தொகை கோரியதில் 674 மனுக்களும், பட்டா மாற்றம் கோரியதில் 445 மனுக்களும் உள்ளன. விசாரணை நிலுவையில் உள்ள மனுக்களில் பட்டா மாற்றம் கோரியது 5,195, உதவித்தொகை கோரியது 1,825, வீட்டுமனைப் பட்டா கோரியது 1,445 மனுக்கள் ஆகும்.
அதிகபட்சமாக திட்டக்குடி வட்டத்தில் 2,388 மனுக்கள் பெறப்பட்டன. பண்ருட்டி வட்டத்தில் 1,913, விருத்தாசலம் வட்டத்தில் 1,433, சிதம்பரம் வட்டத்தில் 1,359, வேப்பூர் வட்டத்தில் 1,175, கடலூர் வட்டத்தில் 1,132 மனுக்கள் பெறப்பட்டன. குறைந்த அளவாக காட்டுமன்னார்கோவிலில் 587, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 833, புவனகிரியில் 1035, குறிஞ்சிப்பாடியில் 1082 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், வேப்பூர் வட்டத்தில் மே 9-ஆம் தேதியும், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் வட்டங்களில் 10-ஆம் தேதியும், பண்ருட்டி வட்டத்தில் 14-ஆம் தேதியும் வருவாய்த் தீர்வாயம் நிறைவுப் பெற்றது. சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி வட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் (மே 15), விருத்தாசலம் வட்டத்தில் புதன்கிழமையும்
(மே 16) வருவாய்த் தீர்வாயம் நிறைவு பெறுகிறது.
சிதம்பரம் வட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமை வகித்து 301 மனுக்களைப் பெற்றார். இதில், 12 மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டன.