குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் தவிப்பு
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் கிராம மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் கிராம மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
இந்த ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இதில் கீழூர், கோரணப்பட்டு, வாணதிராயபுரம், வடக்கு மேலூர் உள்ளிட்டப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும், என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கங்களில் வைக்கப்படும் வெடியால் ஆழ்துளைக் கிணறுகள் சேதமடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
கீழுர் ஊராட்சி, ஆயிப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் நீர் மட்டம் சரிவால், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், ஊர் எல்லை வரை நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.
இதேபோல, கோரணப்பட்டு ஊராட்சி, கோ.சத்திரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் கிராம மக்கள் பள்ளம் வெட்டி குழாயில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். தற்போது கோடைக் காலத்தில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபு (கி.ஊ) கூறியதாவது: குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் கீழூர் ஊராட்சி ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை ஊராட்சி, வடக்கு மேலூர் ஊராட்சி, ஆயிக்குப்பம் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். எனவே, குடிநீர் பிரச்னையை ஒருவார காலத்தில் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.